ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஒரு மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்

 தகுதித்தேர்வு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி
இருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 12.7.2012 அன்று தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில் நான், 89 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வின் போது தாள் 2–ல்(பேப்பர்–2) ‘பிவரிசை கேள்வித்தாள் எனக்கு வினியோகிக்கப்பட்டது.

கேள்வி 115–ல், ‘7 மீட்டர் உள் விட்டமுள்ள ஒரு உள்ளீடற்ற உருளை(ஹாலோ சிலிண்டர்) ஒன்றில் இருசக்கர வாகன ஓட்டி சர்க்கஸ் சாகசங்களை நிகழ்த்துகிறார். அவருக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்காக உள்ள பரப்பளவு சதுர மீட்டரில் எவ்வளவு? என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கேள்வி, ஆங்கிலத்தில் உள்ளீடற்ற கோளம் (ஹாலோ ஸ்பியர்) என்று உள்ளது.

முழு மதிப்பெண்

தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற உருளையின் உட்புற வளைபரப்பை கேட்டுள்ளனர். இதை கண்டுபிடிக்க சூத்திரப்படி விட்டம், உயரம் தேவை. ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளத்தை கண்டுபிடிக்க கேட்டுள்ளனர். இதற்கு, விட்டம் மட்டும் போதும். உருளையின் பரப்பளவை கண்டுபிடிக்க வேண்டுமானால் உயரத்தை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

ஆனால், அதுபோன்று தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உயரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விட்டத்தை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளத்துக்கு பதில் உள்ளீடற்ற உருளை என்று தவறாக உள்ளது. எனவே, அந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

முற்றிலும் வெவ்வேறானது

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.கே.மாணிக்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:

தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற உருளை என்றும், ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியில் உள்ளீடற்ற கோளம் என்றும் உள்ளது. உருளையும், கோளமும் முற்றிலும் வெவ்வேறானதாகும். இந்த கேள்விக்கு ஏ,பி,சி,டி என்று 4 விடைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மட்டும் தான் இந்த 4 விடைகளில் ஒரு விடை சரியானதாகும். தமிழில் கேட்கப்பட்டுள்ள கேள்வியை பொறுத்தமட்டில் அந்த 4 விடைகளில் எந்த விடையை அளித்தாலும் அது தவறானதாகவே இருக்கும்.

தவறானது

எனவே, தமிழில் கேட்கப்பட்டுள்ள அந்த கேள்வி தவறானது. மனுதாரர் தமிழ் வழியில் படித்துள்ளார். இதனால், அவர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வியை கண்டிப்பாக பார்த்து இருக்க மாட்டார். எனவே, மனுதாரருக்கு 115–வது கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

அதை அவர், ஏற்கனவே பெற்ற ஒரு மதிப்பெண்ணுடன் சேர்த்து 90 மதிப்பெண்ணாக கணக்கிட்டு கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதி சான்றிதழ் பெற தகுதியானவரா? என்பதை ஒரு மாதத்துக்குள் முடிவு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பெண்ணால் தேர்ச்சி

ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தமட்டில் 150–க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர். மனுதாரரை பொறுத்தமட்டில் அவர் ஏற்கனவே 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


தற்போது ஐகோர்ட்டு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பதன்மூலம் அவர் 90 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.