வாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர்
பட்டியல் திருத்தப் பணி நடைபெறும்.
பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்படும்; சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 5ல் வெளியிடப்படும். அதன்படி, அக்., 1 - 30 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக் கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் செய்யக் கோரி, 51ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள்பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, நவ., 30 வரை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர், கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், 'ஆன் - லைன்' வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


அக்., மாதத்தில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், அதிகபட்சமாக, முதல்வரின் மாவட்டமான, சேலத்தில், 49 ஆயிரத்து, 323 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 ஆயிரத்து, 198 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மிகக் குறைவாக, அரியலுார் மாவட்டத்தில், 5,303 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.