என்னை 'மிஸ்' பண்ணும் மாணவர்களுக்கு... 'வானிலை' ரமணன் சிறப்புப் பேட்டி

சென்னையின் மழைக்காலம் தொடங்கிவிட்டது மழை சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியையும்   பயத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும். சாலையில் தேங்கிய நீர் வீட்டுக்குள் வந்துவிடுமோ, பெருகும் போக்குவரத்து நெரிசலில்
அலுவலகம் செல்ல முடியுமோ, நடந்து செல்பவர்களின் மீது வாகனங்கள் சேர் அடிக்கும், மின்கம்பிகள் அறுந்து மழை நீரில் கிடக்கும் என மக்களுக்கு ஆயிரம் கவலைகள். ஆனால் மாணவர்களுக்கு ஒரே கவலை தான். விடுமுறை உண்டா இல்லையா என்பதுதான் அந்தக் கவலை. மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தவர் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ரமணன். இந்த மழைக்காலத்தில் அவரை மிகவும் மிஸ் செய்யும் மாணவர்களுக்காக அவரைத் தொடர்பு கொண்டோம்... மகிழ்ச்சியாகப் பேசினார்...  

மழை வந்தாலே உங்கள் ஞாபகம் வருது சார்... மாணவர்கள் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுறாங்க... அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்திய உங்கள் செய்தியாளர் சந்திப்பு  ஸ்டைல் பற்றி?
ஹா...ஹா...ஹா...உண்மை தான் சார்... மாணவர்கள் என் மீது அன்பா இருக்காங்க. அந்த ஸ்டைல் என்னோட இயல்பு தான் சார். செய்தியாளர்கள் கிட்ட ஒரு நிமிடத்திற்குள் எல்லாத்தையும் சொல்லணும். மழை வாய்ப்பு, எச்சரிக்கை, அடுத்த 24 மணி நேர நிலவரம், எல்லாத்தையும் ஒரு நிமிஷத்துக்குள்ள சொல்லணும் என்பதால வேகமா பேசுவேன், அதுவே ஸ்டைல் ஆயிடுச்சு. புயல் நேரங்கள்ல கொஞ்சம் அதிக நேரம் பேசுவேன்.


ஓய்வு பெற்ற பின்னரும் வானிலை நிலவரங்களை கவனிக்கிறீர்களா?
தொடர்ந்து கவனிக்கலை. எச்சரிக்கை செய்வதெல்லாம் இல்லை. ஆனால், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு போறேன். இடியினால எப்படி மரணம் நிகழுது, புயல், தொடர் மழை ஆகியவற்றின் விளைவுகள் எல்லாத்தையும் பத்தி, மாணவர்களைத் தேடிப் போய் பேசுறேன். திருவிடைமருதூர் போனேன்...கன்னியாகுமரி போனேன்... பாண்டிச்சேரியில் அரசு ஆரம்பப்   பள்ளி மாணவர்களிடம் பேசினேன். எங்கெங்கேயோ போய் மாணவர்கள்கிட்ட பேசுறேன்.
 
பணியில் இருக்கும்பொழுது உங்கள் அறிவிப்புகள் மாணவர்களுக்கு, முக்கியமா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வாங்கிக்கொடுக்கும். அவர்கள் உங்களை நாயகனாக வைத்து மீம்செல்லாம் போட்டார்களே
(சிரிக்கிறார்)... ஆமாமா... பசங்க  மனசுல இடம் பிடிச்சது எனக்கு பெரிய சந்தோஷம்மாணவர்களைப் பார்த்தா நமக்கும் ஒரு புத்துணர்ச்சி வரும். அதுனாலதான் இப்பவும் மாணவர்களைத் தேடிப் போறேன், எனக்குத் தெரிஞ்சதை கற்றுத் தருகிறேன். அந்த அன்பும், வாய்ப்பும் கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம்.
முன்பு ஒரு பேட்டியில், சினிமா வாய்ப்பு வருவதாகக் கூறினீர்கள். எதுவும் படங்களில்  நடிக்கிறீர்களா?
அய்யோ...அதெல்லாம் வேண்டாம் சார் நமக்கு. பசங்களோட பேசுறதே எனக்குப் போதும். அதை விட என்ன சார் இருக்கு..


இந்த வருடம் மழை எப்படி இருக்கும்?
இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. இது நவம்பர் 5, 6 வரை தொடரும். அதுக்கப்புறம் வேறு நிகழ்வுகள் நடக்கும் அதை அடிப்படையாகக் கொண்டு தான் சொல்ல முடியும். கரையோர மாவட்டங்களில் மழை இருக்கு. உள்மாவட்டங்களிலும் மழை தேவை. இப்பொழுது பெய்த மழையில் பற்றாக்குறை 18 சதவிகிதத்தில் இருந்து 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இன்னும் பெய்ய வேண்டும். பார்ப்போம்...

வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து அரசுக்கு அறிக்கைகள் கொடுப்பீர்களா? அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொய்வாக இருக்கிறதே?

கண்டிப்பா...  பல துறை அதிகாரிகளும் தொலைபேசியில் கேட்பார்கள். நாங்களும் விவரங்கள், தகவல்களை கொடுப்போம். அதன் பின் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவர்கள் கையில்.  


 சாதாரணமாக மழையை, புயலை எத்தனை நாட்களுக்கு முன் கணிக்க முடியும்அமெரிக்காவில், ஃப்ளோரிடாவில் புயலின் விளைவு மோசமாக இருந்ததே
சாதாரணமாக பத்து நாட்களுக்கு முன் கணிக்கலாம். இன்னும் துல்லியமாக நாலைந்து நாட்களுக்கு முன் கணிக்கலாம். சூறாவளியையெல்லாம் 48 மணி நேரத்துக்கு முன் தான் சரியாக கணிக்க முடியும்ஆனால், மழையை முன்பே கணிக்கலாம்
முன்பு மழை பெய்தால் உங்கள் அறிவிப்பு வந்து, விடுமுறை கிடைக்கும். இப்பொழுது உங்களை மிஸ் பண்ணும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?  
ஹா...ஹா...ஹா... மழையால் விடுமுறை விட்டு தேர்வு தள்ளிப் போனாலும், விடுமுறையில் நல்லா படிச்சு தேர்வை சிறப்பா  எழுதணும். இது தான் நான் மாணவர்களுக்கு சொல்லுவது.
- வே.ராஜவேல்
வசந்த்பாலகிருஷ்ணன்