இஸ்ரோ புதிய தலைவர் k. சிவன் பற்றி அறிய பல தகவல்கள் :

கன்னியாகுமரி: அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி டாக்டர் கே சிவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராம மக்களும்,
விஞ்ஞானின் சிவனின் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி #கே_சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற .எஸ்.கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, கே.சிவன் இந்த பதவியை ஏற்கவுள்ளார். #தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது #இதுவே_முதல்_முறை. இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.

விஞ்ஞானி டாக்டர் கே சிவன் :

விஞ்ஞானி கே.சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கைலாசவடிவு நாடார், தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார்.


ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
பின்னர் பியுசி படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பட்ட படிப்பும் அங்கு பயின்றார். கடந்த 1980ல் சென்னையில் உள்ள எம்..டி.யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தன்னுடைய முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் 1982-ல் முடித்தார்.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கம்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி திட்டத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்த சிவன், தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.


ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்
2014ல் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது அதன் திட்ட இயக்குநராக பணியாற்றியிருந்தார். ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அதன் பாதையை விண்ணில் தீர்மானிப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கியவர். ஆய்வுகள் வாயிலாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதில் சிவன் வெற்றி கண்டார்.


விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் ;

இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். மனைவி மாலதி, 2 மகன்கள். மூத்த மகன் சித்தார்த், பி.டெக் படிக்கிறார். இளைய மகன் சிஷாந்த், அனிமேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.


நண்பர்கள் மகிழ்ச்சி ~

விஞ்ஞானி டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் மக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் வழியில் படித்து இன்றைக்கு மிகப்பெரிய பதவிக்கு வந்து ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் அரசு பள்ளியில் படித்தாலும் சிறு வயதில் இருந்தே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார். கணக்கில் புலியாக இருப்பார் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.