குரூப் 4 தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!- வெடிக்கும் சர்ச்சை


குரூப் 4 தேர்வு எழுதிய மத்தியபிரதேச இளைஞர்.
தமிழகத்தில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை எழுத, 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். வெளிமாநிலத்தவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள். இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர். இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர். 

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.