4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்கப்படாத, 4,000 இலவச, 'லேப் - டாப்'களை, அதிகாரிகளிடம் ஒப்படைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.'லேப் - டாப்' உட்பட, 14 வகையான இலவச பொருட்கள், ஏழு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.


  பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, இவை வழங்கப்படுகின்றன. இதில், பள்ளி படிப்பு முடிந்த பின், உயர் கல்விக்காக இடமாறும் மாணவர்கள், லேப் - டாப்பை வாங்க முன்வருவதில்லை. சிலர், பள்ளிகளில் இருந்து சரியான தகவல் கிடைக்காததால், வாங்காமல் விடுகின்றனர்.இந்த வகையில், விடுபட்ட மாணவர்களுக்கான, லேப் - டாப்களை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில், அவற்றை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட லேப் - டாப்கள், மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்து உள்ளது.இதையடுத்து, எத்தனை மாணவர்களுக்கு, லேப் - டாப் வழங்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தை, ஆதாரத்துடன் அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதோடு, வழங்கப்படாத லேப் - டாப்களை, திரும்ப ஒப்படைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.