'மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

'மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புகார் :பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ - மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.


நடவடிக்கை :


தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


'மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். 'மாறாக, மாணவ - மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 'மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.