சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு


சென்னை பல்கலைக் கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு (2018-2019) முதல் பி.எட். படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர்
பேராசிரியர் பி.துரைசாமி அறிவித்தார்.


சென்னை பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், முதுநிலை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு துணைவேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினர். பின்னர் அவர் பேசியதாவது:-

மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களை எடுத்து படிக்கலாம் (சி.பி.சி.எஸ்.) என்ற கல்வி முறையை ஏற்கனவே கடந்த கல்விக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். உதாரணமாக வரலாறு படிப்பவர்கள் வேறு ஒரு துறையில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுத்து படிக்கலாம். இந்த முறை தானியங்கி கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் படிப்புகளை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த படிப்புகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும்.

இந்த ஆன்லைன் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) விதிமுறைப்படிதான் கொண்டு வரப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்புகள் வருகிற கல்வி ஆண்டில் கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:-

பி.எச்.டி. படிக்க ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். 2016-ம் ஆண்டு அமல்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது. தொலைதூரக் கல்வியில் கொண்டு வரப்படும் பி.எட். படிப்புக்கு 500 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

அதில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலைப்படிப்பில் ஏற்கனவே இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.