எங்கள் சம்பளத்திலிருந்து பிடித்த 18,000 கோடி ரூபாய் எங்கே? - அரசிடம் கேள்வி கேட்கும் ஊழியர்கள், ஆசிரியர்கள் -Vikatan News


எங்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்த 18 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு உள்ளது என்று தமிழக அரசிடம், கேள்வியை எழுப்பியுள்ளனர்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்.


இன்றைய காலகட்டத்தில் அரசு வேலை என்பது குதிரைகொம்பாகிவிட்டது. அரசு ஊழியர் என்றால் வாழ்க்கைக்குப் பொருளாதாரரீதியில் உத்தரவாதம் கிடைக்கும் என்று கருதியவர்களுக்கு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதியத்திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்காக அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் போராட்டம் தீவிரமடைந்ததால் அரசுப் பணிகள், மாணவர்களின் கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டது. இதனால், நீதிமன்றம் தலையிட்டதால், போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைவிட்டனர்.
 அரசு ஊழியர்கள்  போராட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, மாநிலங்கள் விரும்பினால் அந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று தெரிவித்தது. இந்தத் திட்டம் 2004ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஆனால், தமிழகத்தில் மட்டும் 2003 ம் ஆண்டில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்ள பாதிப்புகளை அரசிடம் வலியுறுத்தினோம். தொடர்ந்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, .தி.மு.. தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதியளித்தார். தொடர்ந்து, சட்டசபையில், 110 வது விதியின் கீழ் புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் கமிட்டி 2016 ம் ஆண்டு பிப்ரவரி 19 ம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் 5 பேர் இடம்பெற்றனர்.

2016 செப்டம்பரில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கமிட்டி ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு நவம்பர் 2016 ல் கமிட்டி டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து 2017 மார்ச் மாதம் வரை மீண்டும் கமிட்டி நீட்டிக்கப்பட்டது. 2017 ம் ஆண்டு மார்ச் 30 ல் கமிட்டி தலைவராக இருந்த சாந்தாஷீலாநாயர் விலகினார். அதன்பிறகு 2017, ஆகஸ்ட் 3 ல் ஸ்ரீதர் ..எஸ்., கமிட்டித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போதும் கமிட்டி நவம்பர் 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கமிட்டி சார்பில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில் 2003 ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தவகையில் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளத் தொகை அரசிடம் உள்ளது. அந்தத் தொகை, புதிய ஓய்வூதியத்திட்டத்திலும் செலுத்தவில்லை.
 
புதிய பென்சன் திட்டத்தில் தமிழக அரசு சேர வேண்டுமென்றால், ஓய்வூதிய ஒழுங்காற்றல் ஆணையத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தம் இதுவரை போடவில்லை. இனிமேல் போடவேண்டுமென்றால் ஊழியர்களிடம் பிடித்த 18 ஆயிரம் கோடி ரூபாயுடன் அரசு, தன் பங்களிப்பாக 18 ஆயிரம் கோடி என 36 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இது, கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நிதித்துறையிடம் சங்கத்தின் சார்பில் தெரிவித்தபோது, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக கமிட்டி அமைத்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் கமிட்டியால் அறிக்கைகூட சமர்பிக்கப்பட முடியவில்லை. இந்தியாவில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கேரளா, திரிபுரா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. அதுபோல தமிழக அரசும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராமல் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே தொடர வேண்டும்.

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வழியில் ஆட்சியை நடத்துவதாக தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்கின்றனர். ஜெயலலிதா அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம், சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி மன்றச் செயலபாளர்களுக்குக் காலமுறை ஊதியம் போன்றவை செயல்படுத்தப்படவில்லை. மேலும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதிலும் குளறுபடிகள் உள்ளன. நிலுவைத் தொகை வழங்க இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால்தான் எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாணவர்களின் நலன்கருதி, தற்காலிகமாகப் போராட்டத்தை கைவிட்டுள்ளோம். மார்ச் 24 ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும். மே மாதத்தில் சென்னைக் கோட்டையை முற்றுகையிட 'ஜாக்டோ - ஜியோ'வின் உயர்மட்டக்குழு முடிவு செய்துள்ளது" என்றார்.