தமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே
இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்
தெரியவந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி, இதுதான் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையா என்று பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி எம்.பி. கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தமிழக கல்வித் துறை இரு மாநிலங்களாக பிரிந்து கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடம் காலி!

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை சுட்டிக் காட்டியுள்ள அன்புமணி,

வெறும் கைகளால் முழம் போடுவதைப் போல கல்வித்தரத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் தமிழகத்தில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என வெற்று முழக்கத்தை பினாமி அரசு எழுப்பி வருகிறது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அடிப்படைத் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குக் கூட தமிழக அரசு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் 884 உயர்நிலைப்பள்ளிகளிலும், 34 மேல்நிலைப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பது தான் கொடுமை ஆகும். கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 900 உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 100 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக உயர்த்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனால் 950 உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் அந்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்பியிருக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அதை செய்யவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக இரு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 பள்ளிகள் தலைமையின்றி தடுமாறுகின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி.

பத்தாயிரம் ஆசிரியர் பணியிடம் காலி!

தலைமை ஆசிரியர் மட்டுமல்ல ஆசிரியர் பணியிடங்கள் இதைவிட அதிகமாக காலியாக இருக்கின்றன.

மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ளன. வரும் மே மாதத்துடன் முடிவடையும் கல்வியாண்டின் இறுதியில் இது 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும். ஆனால், இந்த பணியிடங்களை நிரப்ப கடந்த இரு ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்காமல் கல்வித் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும்? மாணவர்களால் எவ்வாறு அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி கற்க முடியும்? ஆட்சியாளர்களின் இத்தகைய அலட்சியம் காரணமாகத் தான் ஒரு காலத்தில் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்த நிலை மாறி, இப்போது அரசு பள்ளிகள் என்றாலே மக்கள் விலகி, ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார் அன்புமணி.

கல்வித் துறையில் இரு தமிழகங்கள்!

மேலும், ‘தமிழகக் கல்வித் துறையில் இரு தமிழகங்கள் இருக்கிறதுஎன்பதையும் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 4742 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தத் தகவலை மேற்கோள் காட்டியுள்ள அன்புமணி,

நிர்வாக இட மாறுதல் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களுக்கு இட மாறுதல் வழங்கியது தான் இந்த நிலைக்குக் காரணம். ஒருபுறம் வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு பாடத்தை நடத்த பல ஆசிரியர்கள் உள்ளனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை இரு தமிழகங்கள் இருப்பதையே இது காட்டுகிறது.

பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், வட மாவட்டங்களில் ஆசிரியர்களே இல்லாமல், தென் மாவட்டங்களில் கூடுதலாக ஆசிரியர்கள் இருப்பதும் இப்போது புதிதாக ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்த நிலை காணப்படுகிறது.