வாட்ஸ்அப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான


தகவல்களை நீக்கம் செய்துகொள்ளும் வசதியில் புதிய அப்டேட்டை
ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாறுதல் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றம் செய்யும் செயலிகளில் முதன்மையான ஒன்றாக வாட்ஸ்அப் திகழ்ந்து வருகிறது. அதில் அவ்வப்போது பயனர்கள் ஈர்ப்பதற்காகப் புதுமையான அப்டேட்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான புதிய வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி பயனர்கள் தகவல்களை ஒருவருக்கு அனுப்பிய பின்னரும் அவரிடமிருந்து அந்தச் செய்தியை ஏழு நிமிடங்களுக்குள் நீக்கம் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருந்தது.

இந்த வசதியானது சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில் அதை அப்டேட் செய்து ஒரு மணி நேரத்துக்குள் அனுப்பிய தகவலை அனுப்பியவர், பெற்றவரிடம் இருந்து நீக்கம் செய்து கொள்ளும் புதிய அம்சத்தை வழங்கி உள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாகப் பயனருக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் நீக்கம் செய்து கொள்ள முடியும். இந்த வசதியுடன் மேலும் ஒரு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை மேற்கொண்டு வந்துள்ளது. ஆனால், அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

அந்த புதிய வசதியில் ஃபார்வர்டு மெசேஜ்ஜின் மேல் அவை எத்தனை முறை ஃபார்வர்டு செய்யப்பட்டுள்ள என்ற தகவலைச் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதனால் போலியான தகவல்கள் நீக்கம் செய்யப்படலாம் என்றும் அவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த வசதியை இந்த அப்டேட்டில் வெளியிடவில்லை. அதன் சோதனை ஓட்டம் முழுவதும் முடிவடைந்த பின்னர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.