சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரதம்! -விகடன் நியூஸ்


நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தும்
விதமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், வரும் 23-ம் தேதி முதல் சென்னையில், தங்கள் குடும்பத்துடன் சாகும்வரை
உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.


தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், பல்வேறு பிரிவுகளும் பலதரப்பட்ட சங்கங்களும் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் ஒருங்கிணைந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது வழக்கம்.

சில அமைப்புகள் அதில் சேராமல் தாங்களாகவே சுயமாக, தனித்துப் போராடுவதும் வழக்கம். அப்படியொரு அமைப்புதான் தற்போது சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்காக, தங்களது குடும்பத்துடன் சென்னையை நோக்கி ஏப்ரல் 22-ம் தேதி படையெடுக்க உள்ளனர். மறுநாள் காலை முதல், அதாவது, 23-ம் தேதி முதல் சென்னையிலுள்ள டிபிஐ வளாகத்தில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.


30.6.2009-ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முந்தைய மாதத்தில் (31.05.2009) பணி நியமனம்செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருக்கிறது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி. ஆனால், சம்பளத்தில் மட்டும் ஏன் இந்த இமாலய வித்தியாசம்? அதை, உடனடியாகக் களைய வேண்டும் என்பதுதான் இந்தப் பிரிவு இடைநிலை ஆசிரியர்களின் கேள்வி. இதற்காக, இவர்கள் கடந்த 9 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இது இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவதில் மனம் வெறுத்துதான், தங்களின் இறுதி முயற்சியாக குடும்பத்துடன் சாகும் வரை போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் இயக்க மாநில பொதுச் செயலாளரான ராபர்ட், "தமிழகத்தில் 6- வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவந்தது. 6-வது ஊதியக்குழுவில் அது முற்றிலும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களான எங்களைத் தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.


அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தற்போது வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 10-ம் வகுப்பு  கல்வித் தகுதி மட்டுமே கொண்ட ஏனைய அரசு ஊழியர்களுக்குக்கூட ரூபாய் 9300-4200, 4400 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில அரசு நியமிக்கும் ஒருநபர் அல்லது இருநபர் குழுக்களிடம் எங்களது ஊதியமுரண்பாட்டை விளக்கி ஊதியம் கோரும்போது, அவர்கள் 'இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம். அவர்களுக்கு  இந்தி தெரியாது; கணினி கற்றுக்கொள்ளவில்லை  எனப் பல காரணங்களைக் கூறி, எங்களது நியாயமான கோரிக்கைகளை  நிராகரித்துவிடுகிறார்கள். 1.6.2009-க்கு முன் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் 8370-2800  எனவும்,   1.6.2009- க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, எங்களுக்கு  5200-2800 என அடிப்படை ஊதியத்தில் 3170 குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைத்தான் களைய வேண்டும் என்று போராடிவருகிறோம். இதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 20 முதல் 28 வரை 8 நாள்கள் மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். 8-ம் நாள்,  அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள்,  2009-க்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும்' என எழுத்துபூர்வமாக உத்ரவாதம் அளித்தார்கள். ஆனால்,அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த அரசு எங்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது" என்றார்.