2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்காத தமிழக அரசு! - வேல்முருகன் கண்டனம்!
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்காத தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் (94,000) பேர் (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்) இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பல முறை வைக்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது ஏற்கனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது தேர்ச்சி பெற்ற 94,000 பேருக்கும் இது மிகுந்த அச்சத்தையும், பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அரசோ இவ்விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது. தேர்ச்சி பெற்ற இத்துனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும்.

எனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் பாதிக்கப்பட்ட 94,000 பேரின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்