அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடக்க சங்கத் தலைவர்களை கைது செய்யும் காவல் துறை: அன்புமணி கண்டனம்!


நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின்  போராட்டத்தை முடக்க சங்கத் தலைவர்களை காவல் துறை கைது செய்வதாக,
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்குடன் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் இரவோடு, இரவாக கைது செய்து வருவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும். அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது புதிதாக முன்வைக்கவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தினார்கள். ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வந்த தமிழக அரசு, அதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் தான் வேறு வழியின்றி இறுதி கட்டமாக கோட்டை முற்றுகையை அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் களைய வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களிடம் நியாயமும், நேர்மையும் இருப்பதால் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்துகின்றனர். அரசிடமும் அதே நேர்மையும், நியாயமும் இருந்திருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நேர்மையும், நியாயமும் இல்லாததால் தான் அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அரசு ஊழியர்களை கைது செய்வதற்கு மட்டுமின்றி, அவர்களின் போராட்டம் தேவையற்றது என்று கூறுவதற்கும் தமிழக அரசுக்கு எந்த தகுதியும், உரிமையும் இல்லை. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.

அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். இதுதொடர்பான அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் இன்று வரை அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட வில்லை. இனியும் காத்திருக்க முடியாது என்ற நிலையில் தான் ஊழியர்கள் போராடத் தயாராகின்றனர்.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்தோ, அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயம் குறித்தோ எதையும் கூறவில்லை. மாறாக, அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதைப் போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது.

அரசு ஊழியர் ஊதியம் உயர்த்தப்பட்டது பிரச்சினையில்லை. அதற்கு இணையாக அரசின் வருமானத்தை உயர்த்தாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும். இதையெல்லாம் மறைத்து விட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி சிக்கலை திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2003-ம் ஆண்டு இதைவிட கடுமையான அடக்குமுறைகளை அரசு ஊழியர்கள் மீது ஜெயலலிதா கட்டவிழ்த்து விட்டது. இறுதியில் அவர்களிடம் அரசு பணிந்ததை தமிழகம் அறியும். எனவே, வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்