ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிரடி கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்துகின்றனர்.அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, முன் எச்சரிக்கை
நடவடிக்கையாக, சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், மூன்றாண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாக, இன்று, கோட்டை நோக்கி பேரணி செல்ல போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த பேரணியில், ஆயிரக்கணக்கானோர் திரண்டால், முற்றுகைஇ போராட்டமாக மாறும் என, போலீசார் கணித்துள்ளனர்.எனவே, அசம்பாவிதங்களை தடுக்க, முன் எச்சரிக்கையாக சங்க நிர்வாகிளை போலீசார் கைது செய்து வருகின்றனர். வீடுகள், சங்க அலுவலங்களில், போராட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்த, ஏராளமான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி, அதில், போராட்டத்துக்கு வருவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையால், ஜாக்டோ - ஜியோவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், சுப்ரமணியன் கூறுகையில், ''சென்னை செல்ல ஏற்பாடு செய்திருந்த, வாகன உரிமையாளர்களை போலீசார் மிரட்டி, ஆர்.சி., புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும், திட்டமிட்டபடி ஊழியர்கள் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் பங்கேற்பர்,'' என்றார்.இதனிடையே, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், சம்பளத்தின் அளவு, இரட்டிப்பாக காட்டப்பட்டுள்ளதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.