இது
குறித்த அவரது அறிக்கை:’’தமிழ்நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 8.05.2018 அன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளை இரவோடு இரவாகக் கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. சென்னைக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்தி வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பெண்கள் என்றும் பாராமல் சட்டவிரோதமாகக் காவலில் வைப்பது என அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவுவது கண்டனத்துக்குரியதாகும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டுமென்றும், அவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பென்சன் திட்டத்துக்குப் பதிலாக பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அங்கன்வாடி -சத்துணவு ஊழியர்களின் ஊதியத்தை வரைமுறை செய்ய வேண்டும், சம்பளபாக்கியை ரொக்கமாகத் தரவேண்டும் உள்ளிட்ட நியாயமானக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதாகத் தேர்தலின் போது அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்தபின் சட்டபேரவையிலும் அறிவிப்பு செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான வழக்கின் போது உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஒப்புக்கொண்டவற்றையும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் தான் மீண்டும் போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசே பொறுப்பு.
போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு பல நாட்கள் ஆன பின்னாலும்கூட பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் கைது நடவடிக்கைகளை எடுத்திருப்பது அதிமுக அரசின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது. கைது நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், ஆசிரியர் அரசு ஊழியர் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வுக் காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். ’’