"அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும்" ஆட்சியரிடம் மனு!


அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரையும், செயலாளர் ஜெகநேசனும் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஜெகநேசன் கூறுகையில்மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசுப்  பள்ளிகள் உள்ளன. ஆனால், அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை.
 
இதனால் கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை நீட் தேர்வுகள் வரை நீளுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம்வரை அனைவரும் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளியின் மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை உருவாகும். அரசுப் பள்ளியை அரசு ஊழியர்கள் நன்றாக ஆய்வு செய்து கவனிப்பார்கள்.

அரசுப் பள்ளியில்தான் அதிக அளவு முதுநிலை பட்டதாரிகள் உள்ளனர். எனவே, அரசுப் பள்ளியை நாம் கண்காணிக்கும்போது நல்ல தரமான கல்விக்கூடமாக விளங்கும் என்ற நோக்கில் மனு அளித்தோம்.

மனுவைப் பெற்ற ஆட்சியர் நல்ல யோசனையாக உள்ளது இதற்குத் தனி டீம் அமைத்து ஆய்வு செய்கிறேன். இது சாத்தியப்படும், அரசுப்  பள்ளிகளுக்கு பெருமையைத்  தரும் என்றால் கண்டிப்பாக இதை நிறைவேற்றுவோம் அதற்கு 6 மாதம் தேவைப்படும் எனத் தெரிவித்தாக கூறினார்.

மேலும், தமிழக அளவில் இந்தத்  திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் அவர்களுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் அதன் செயலர்களுக்கு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.