ஆசிரியர் - அரசு ஊழியர்களை கைது செய்யும் தமிழக அரசின் அராஜகபோக்கிற்கு சிஐடியு மாநிலக்குழு கண்டனம் !


புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட கோரி , ஊதிய நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு தரப்பில் கோரிக்கைகள் மீது  தீர்வு காண்பதற்கு எந்த முனைப்பும் காட்டாததால் மே 8 அன்று கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு,  போராட்டத்தை ஒடுக்கும் விதமாக காவல்துறையை ஏவி  அரசு ஊழியர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளை  முன்னெச்சரிக்கை என்ற பெயரில் வீடு புகுந்து கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதை சிஐடியு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கடைபிடிக்க தயங்கிய முன்னெச்சரிக்கை கைது அணுகுமுறையை  மீண்டும் உயிர்ப்பிக்க எடப்பாடி அரசு  துணிந்துள்ளதற்கு தமிழக உழைப்பாளி மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை செய்கிறோம்.
தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ஜெயகுமார், அரசுக்கு வரும் வருவாயில் 70 சதமானம் அரசு ஊழியருக்கு செலவிடப்படுவதாக உண்மைக்கு புறம்பான கருத்தை  அரசு செலவிலேயே விளம்பரமாகக்கொடுத்துள்ளார். இது பிரச்சனையை திசைதிருப்பும்  மோசமான செயலாகும்.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அரசின் அடக்குமுறையை மீறி போராடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழக தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் முழு ஆதரவை சிஐடியு தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக அரசு தனது தவறான அணுகுமுறையைக் கைவிட்டு, போராடும் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசி சுமூக தீர்வு காணவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் வேண்டுமென சிஐடியு தமிழ் மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
தங்களன்புள்ள

(.சவுந்தரராசன்)
தலைவர். சிஐடியு