பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத் திட்டம்: கணினி ஆசிரியர்களின்றி தவிக்கும் மாணவர்கள்!


தமிழகத்தில் நிகழாண்டு பிளஸ் 1 வகுப்புக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டத்தில் கணினிக்கு மூன்று விதமான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போதிய ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் நிகழாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கணிதப் பாடத்துடன் வரும் கணினி பிரிவுக்கு கணினி அறிவியல் பாடங்கள், கலைப்பிரிவுக்கு கணினி பயன்பாடு பாடங்கள், தொழில் கல்விப் பிரிவுக்கு கணினி தொழில்நுட்ப பாடங்கள் என 3 விதமான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் இதற்குரிய கணினி ஆசிரியர்களின்றி மாணவர்கள் அவதியுறுவதாக அதிருப்தி எழுந்துள்ளது. நிகழ் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமன்றி, அடுத்தாண்டு
 பிளஸ் 2 வகுப்புக்கும் ஆசிரியர்களின்றி மாணவர்கள் தவிக்கும் சூழல் உள்ளது.
 தற்போது மேல்நிலையில் இரண்டு வகுப்புகளும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் நிலையில், போதிய ஆசிரியர்களின்றி மாணவர்கள் மிகுந்த சிரமத்தை அடைவதாக பெற்றோர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து கணினி அறிவியல் ஆசிரியர் சங்க பொதுச் செயலர் வெ.குமரேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: ஏற்கெனவே பிளஸ் 1 தொழில் கல்விப் பிரிவில் உள்ள 2 செய்முறை பாடங்களில், ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கணினி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கணினி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும், மூன்று கணினி பாடங்களுக்கும் தனித்தனியாக செய்முறை பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது.
 தற்போது, தமிழகத்தில் 1,800 கணினி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 1,000 பள்ளிகளில் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் கணினி ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார். தற்போது ஒவ்வொரு கணினி ஆசிரியர்களும் குறைந்தபட்சம் வாரம் 21 பாடவேளை பாடம் நடத்த வேண்டியுள்ளது.
 மேல்நிலைப் பள்ளியில் கணினி பாடத்துக்கு மட்டும் மாணவர்களுக்கு (40: 1 என்ற அளவில்) தகுந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அதிக பாடவேளை ஒதுக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், போதுமான அளவு கணினிகளும் ஆய்வகங்களில் இல்லை. புத்தகங்களும் முழுமையாக வந்து சேரவில்லை.
 தமிழக அரசு கடந்த 2017-18ஆம் கல்வி ஆண்டு மானிய கோரிக்கையில் 748 கணினி ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பதாக கூறியதையும் செயல்படுத்தவில்லை.
 இதனால், நடப்பாண்டு அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதுடன், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், ஆய்வகங்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய கணினிகளையும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

NEWS SOURCE:DINAMANI.