பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கடந்தாண்டு அக்டோபர் முதல் ஊதியஉயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு, பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில், திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கருத்தியலாகவும், 2017-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனாகவும் வழங்கியது.
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகளை திருத்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழுவை அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசால் திருத்திய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசால் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்
அடிப்படையில், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ள பணியாளர்கள் தங்கள் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை, கடந்த 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கருத்தியலாகவும், 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனாகவும் பெறலாம்.இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் இணையான பணியாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள்.இந்த திருத்திய ஊதிய விகிதத்தை அமல்படுத்துவதால் ஆண்டுக்கு ரூ.500 கோடி கூடுதலாக செலவாகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.