ரூ. 50,000 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு


ரூ. 50,000 பணத்தை காவல்துறையிடம்  ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன்
இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
 
அப்போது சிறுவன் முகமது யாசினின் செயலை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலியை பரிசளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த், யாசினின் செயல் பாராட்டுக்குரியது. அவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எதிர்க்காலத்தில் அவர் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு உதவி செய்வேன். யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என்று தெரிவித்தார்.

ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முகமது யாசின் தற்போது சின்ன சேமூர் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற யாசின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. மேலும் கல்விச் சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை பரிசளித்த போலீஸார் வரும் 19-ஆம் தேதி யாசினுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளனர்.