மதுரை மாட்டுத்தாவணியில் ஆசிரியர் இல்லம் அமைகிறது..! தொடர் தேடலுக்கு பின் 69 சென்ட் இடம் தேர்வு


*மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் தேர்வு பணி ஒரு
வழியாக முடிவுக்கு வந்தது. ஐந்து முறை மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே 69 சென்ட் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது*


*வெளி மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் நலன் கருதி முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் 'கோவை, திருச்சி, மதுரையில் தலா 3 கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்,' என அறிவித்தார்*


*கோவையில் இல்லம் பயன்பாட்டிற்கு வந்தது. திருச்சியில் பணி முடிவுற்றது. மதுரையில் இடம் கூட தேர்வு செய்ய முடியவில்லை. முதலில் புதுதாமரைப்பட்டி தேர்வு செய்யப்பட்டது. அதிகாரிகள் திருப்தியடையாததால் ரத்து செய்யப்பட்டது. பின் ஒத்தக்கடை, ஜெய்ஹிந்துபுரம் மார்க்கெட் அருகே கட்ட முடிவு செய்யப்பட்டது*


 *இடம் பற்றாக்குறையால் பொதுப்பணித்துறை அதை மறுத்தது.பின் அவனியாபுரம் அரசு பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு வரைவு திட்டமும் தயாரானது*


 *பொது பணித்துறையும் டெண்டர் வெளியிட இருந்த நிலையில், இல்லம் விவகாரம் அமைச்சர் உதயகுமார் கவனத்திற்கு தெரிய வந்ததும், 'நகர் பகுதிக்குள் இல்லம் அமைந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்,' என ஆலோசனை அளித்தார்.இதனால் அவனியாபுரம் இடமும் கைவிடப்பட்டு, எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகே இடம் தேர்வுக்கான ஆய்வு நடந்தது*


*நீண்ட ஆய்வுக்கு பின் பஸ் ஸ்டாண்ட் - அண்ணாநகர் ரோட்டில் மாட்டுத்தாவணி மார்க்கெட் அருகே 69 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு, வருவாய் துறை சார்பில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இடம் தேர்வு குறித்த தேடுதல் படலம் முடிவுக்கு வந்துள்ளது*


*கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மூன்று தளங்களாக அமையும் இந்த இல்லத்தில் உயர் கல்வி அதிகாரிகள் தங்குவதற்கான 'சூட்' அறைகள் மற்றும் கருத்தரங்க கூடம், கார் பார்க்கிங், நவீன கிச்சன் உள்ளிட்ட வசதிகளுடன் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும்," என்றார்*