அரசுப் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் வாகனங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஜெர்மன் நாட்டிலிருந்து 1000 வாகனங்கள் பெறப்பட்டு விரைவில்
பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்க விழா, கனவு ஆசிரியர் விருது, புதுமைப் பள்ளி விருது வழங்கும் விழா, கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா ஆகியவை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில் பங்கேற்று அமைச்சர் கே.. செங்கோட்டையன் பேசியது:

தமிழக அரசானது வேறு எந்தத் துறைக்கும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது. இருப்பினும்

33 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லாத நிலை உள்ளது.

848 பள்ளிகளில் 5 முதல் 10 மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலை உள்ளது. இந்நிலை மாற மக்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

நிகழாண்டு கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெறச் செய்தது பாரட்டுக்குரியது. அடுத்தாண்டு 3 லட்சம் மாணவர்களை கூடுதலாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுத் தராமல் உடலைப் பேணவும், உற்சாகத்துடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாலையில் தினந்தோறும் 45 நிமிடங்கள் விளையாட்டுப் பயிற்சியும், காலையில் 20 நிமிடம் யோகா பயிற்சியும் அளிக்கப்படும். இதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்படும். மைதானம் அமைக்க இட வசதியில்லாத பள்ளிகளில் மாற்று இடத்தில் மைதானம் அமைத்து தரப்படும்.
துப்பரவுப் பணியாளர் இல்லாத பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜெர்மன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆயிரம் சிறப்பு வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளளது.

இந்த வாகனத்தில் கழிப்பறை துப்புரவுக்கான அனைத்து வசதிகளும் இருக்கும். 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் வழங்கி சுத்தம் செய்யப்படும். இதற்கு சேவை அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளன என்றார் அவர்.

அங்கன்வாடியிலிருந்து ஆங்கிலம்'

அரசுப் பள்ளிகளின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கன்வாடியிலிருந்து புதுமைகளை தொடங்கவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆங்கிலமும், தமிழும் கற்றுக் கொடுத்து ஒன்றாம் வகுப்பு சேரும்போதே அரசுப் பள்ளியில் ஆங்கில வழியிலோ, தமிழ் வழியிலோ கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பெற்றோர்களே தனியார் பள்ளிகளைப் புறக்கணித்து அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் நிலை உருவாகும் என்றார் அவர்.