அரசு துவக்கப் பள்ளிக்கு, ஐந்து டிராக்டர்களில், கிராம மக்கள் கல்விச்சீர்

சேலம் மாவட்டம், முத்தானுாரில், 64 ஆண்டு களாக, அரசு துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்று முதல் ஐந்தாம்
வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு முத்தானுார், கட்டபுளியமரம், விநாயகர் நகர், கட்டியப்பன்புதுார் உள்ளிட்ட கிராம மக்கள், நேற்று கல்விச்சீர் வழங்கினர். மேள தாளம் முழங்க, வகுப்பறைக்கு தேவையான ஐந்து பீரோ, டேபிள், சேர், மின் விசிறி, ஸ்டாண்ட், நோட்டு, புத்தகங்களை, ஐந்து டிராக்டர்களில், மக்கள் ஏற்றிச் சென்றனர். பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளியில் விழா நடந்தது. மாணவ - மாணவியர் பங்கேற்ற, பேச்சு போட்டி, பழமொழி ஒப்புவித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி புரவலர் திட்டத்தை துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கினர். சீர் வழங்கிய சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளை விட, இங்கு ஆங்கிலம், கையெழுத்து பயிற்சி சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, குழந்தைகள் அதிகம் சேர்கின்றனர். பள்ளியில் இரு வகுப்பறை மட்டுமே உள்ளது. இதில் தான், அனைத்து, மாணவ - மாணவியரும் நெருக்கடியாக அமர்ந்து படிக்கின்றனர். பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டித் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.