
சென்னை: மறைந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் - குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் கலாம். சிறந்த விஞ்ஞானியாக - அதிலும் குறிப்பாக அணுசக்தி துறையின் ஆற்றல் மிக்க வல்லுனராக - தேசத்தின் திறமைமிக்க நிர்வாகியாக - எதிர்காலத்தின் எழிலார்ந்த இந்தியாவிற்காக தினம் தினம் கனவு காணும் தேசபக்தராக திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக - ஜனாதிபதியாக - பதவி வகித்த 5 ஆண்டுகளும் மறக்க முடியாதவை. குடியரசு தலைவர் மாளிகையை "மக்கள் மாளிகை"யாக மாற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கலாம். ஜாதீய பலமோ - மதத்தின் பின்பலமோ - கோடீஸ்வர பின்னணியோ இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இந்தியாவின் கடைகோடியில் பிறந்து - குடியரசு தலைவர் வரை சொந்த உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர் டாக்டர் கலாம். விடியற்காலையில் விழித்தெழுந்து, வீடு வீடாக செய்தித்தாள்களை விநியோகித்து - தமிழ்மொழியில் பயின்று - விஞ்ஞான மேதையாக வளர்ந்தவர் டாக்டர் கலாம். குடியரசு தலைவராய் திகழ்ந்த காலத்தில் உலக நாடுகளிலும், அனைத்துலக அமைப்புகளிலும் அபாரமான சிந்தனைகளுடன் அற்புதமாய் உரையாற்றி அறிஞர் பெருமக்களையே அசத்தியவர் டாக்டர் அப்துல் கலாம். தனது ஆற்றல் மிக்க உரைகளால் மறைந்த வி.கே.கிருஷ்ணமேனனுக்குப் பிறகு உலக நாடுகளை தனது சிந்தனை மிக்க உரைகளால் இந்தியாவையே நிமிர வைத்தவர் அப்துல்கலாம். பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன் கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து பாடுபட்டவர் டாக்டர் அப்துல் கலாம். நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம். இதுவரை எல்லா குடியரசு தலைவர்களும் ஓய்வுபெற்ற பிறகு, உண்மையாகவே ஓய்வு பெற்று பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியே வாழ்ந்தாலும் ஓய்வு பெறாமல் பொதுவாழ்விற்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர் டாக்டர் கலாம். தேசத்தின் மிக முக்கிய இரண்டு பிரச்சனையான முல்லை பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனைக்கு மிக முக்கிய ஆலோசனைகளையும் மகத்தான தீர்வுகளையும் முன்வைத்தவர் டாக்டர் கலாம். 100 கோடி மக்களின் அதிகாரப்பூர்வ அதிபர் என்ற உயர் பதவியில் இருந்தும் கூட சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசப்பூர்வமாகவும் மாணவர்களோடும், குழந்தைகளோடும் உரையாடிய உயர்ந்த உள்ளம் உடையவர் டாக்டர் கலாம். உடம்பில் ஓடும் ஒவ்வொரு ரத்தத் துளியிலும் தேசபக்த உணர்வை இழைத்து கொண்டு மக்கள் ஜனாதிபதியாக மலர்ந்தவர் டாக்டர் கலாம். இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவர்களை தன் பொன்மொழிகளால் இன்றுவரைதாங்கி பிடித்து வரச் செய்பவர் டாக்டர் கலாம் குழந்தைகளுக்கு நேருவாகவும், பெரியவர்களுக்கு நவீன காந்தியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் கலாம். இப்படிப்பட்ட மகான்மேல் ஒரு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை ஒரு துரும்பளவுகூட ஒருவரும் எக்காலமும் மீது சுமத்த முடியாது. ஏனெனில் இவர் அரசியல்வாதி இல்லை!