பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும்


வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வாருக்கு எழுதியுள்ள கடித விவரம்:

நாடு முழுவதும் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுக்கு 100 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்துக்கு பலமுறை விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய குழுவில் பலமுறை விவாதிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக இச்சிக்கல் நீடித்து வருகிறது.
ஓய்வூதிய சட்டம் 12 பிரிவின்படி ஓய்வூதியம் பெறும் இவர்கள், கம்யூட்டட் ஊதியம் கோரும்போது அவர்களது அசல் ஓய்வூதிய தொகையில் 100 மாதங்களுக்கு மூன்றில் ஒரு பகுதி குறைத்துக் கொண்டே வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பெறுவதன் மூலம் கம்யூட்டட் ஊதியத்தை இந்த 100 மாத காலத்தில் திரும்பச் செலுத்தி விடுகின்றனர்.
திரும்ப அளிப்பதுதான் நியாயம்: இயற்கையாகவே, வருங்கால வைப்பு நிதி நிர்வாகம் 100 மாதத்துக்குப் பிறகு மொத்தமாகத் தரும் தொகையை, ஓய்வூதியம் பெறுபவர் 100 மாத தவணையில் திருப்பித் தந்துவிடுவதால், அவருடைய நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை அவருக்கு திரும்பவும் அளிக்க வேண்டும். ஆனால், ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பங்கு தொகையை அரசு தனக்கு அதிகாரம் இல்லாமலேயே திரும்ப எடுத்துக் கொள்வதாகவே அமைகிறது.
சட்டம் கூறவில்லை: வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் மூன்றில் ஒரு பகுதி ஓய்வூதியத் தொகையை, 100 மாதங்களுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள அனுமதி இல்லை. இந்தச் சட்டம் எந்தவொரு ஷரத்திலும் கம்யூட்டட் ஊதியப் பகுதியை திரும்ப வழங்க இயலாது என்று கூறவில்லை. இந்தச் சட்டம் இதுகுறித்து எதுவும் கூறாதநிலையில், வருங்கால வைப்புநிதி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள், ஓய்வூதியர்களின் மூன்றில் ஒருபகுதி ஓய்வூதியத் தொகையைத் தராமல் எடுத்துக் கொள்வது நியாயமற்றது.
எனவே, வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தில் மாற்றப்பட்ட ஊதியம் பெற்று 100 மாதங்கள் முழுமையடைந்தவர்கள் அனைவருக்கும், முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என டி.கே.ரங்கராஜன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்