ஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ஆய்வு இன்று முடிகிறது-பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஆய்வை முடித்து இன்று அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த சம்பள உயர்வு 1-1-2016 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தாலும், 21 மாதம் நிலுவைத்தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது

இந்நிலையில் 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் தலைமையில் விசாரணை நடத்தி ம் தேதிக்குள் (இன்று) அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. சித்திக் தலைமையிலான குழு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கடந்த மாதம் நேரில் அழைத்து பேசியது. அப்போது, தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளித்தனர்.
 

சித்திக் தலைமையில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கொடுத்த பரிந்துரைகளை ஆய்வு செய்து, இறுதி நாளான இன்றைக்கு முதல்வரிடம் அறிக்கை அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய அரசு ஒரு குழுவையும் அரசு அமைத்தது. அது மட்டுமல்லாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. அந்த குழு அறிக்கையை அரசுக்கு அளித்து, ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று நம்புகிறோம். குறிப்பாக, அலுவலக உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிடாமல் மீண்டும் தமிழகம் தழுவிய போராட்டம் நடைபெறும்என்றனர்.