ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு!!!

புதுச்சேரி: 'அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தினை மேம்படுத்த மானிய தொகை 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்திற்கு
பதிலளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:


புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழலை மேம்படுத்திடவும், கல்வித் தரத்தினை மேம்படுத்திடவும், இந்த ஆண்டு பள்ளி மானியம், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை உயர்த்தி அளிக்கப்படஉ ள்ளது. இந்த நிதியை பள்ளியின் பராமரிப்பு, பயன்பாட்டு பொருட்கள், ஆய்வுக்கூடப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்க பயன்படுத்தி கொள்ளலாம். மாணவர் எண்ணிக்கை 1 முதல் 100 வரை- 25 ஆயிரம் ரூபாய், 100க்கு மேல் 250 வரை - 50 ஆயிரம் ரூபாய், 250க்கு மேல் 1000 வரை 75 ஆயிரம் ரூபாய், 1000க்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.பயோ மெட்ரிக் வருகைப் பதிவுஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க கைரேகை அடிப்படையிலான மின்னணு வருகை பதிவு இயந்திரம் அனைத்து அரசு பள்ளிகளிலும் பொருத்தப்படவுள்ளது.
காரைக்கால் பிராந்தியத்தின் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய மின் தொகுப்பில் ஒதுக்கியுள்ள மின்சாரத்தை பெறுவதற்கு, புதிதாக ஒரு தானியங்கி துணை மின் நிலையம் ரூ.48.17 கோடி செலவில் அமைக்க உத்தேசித்து, அதற்கான பணிகள் பவர் கிரிட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணைமின் நிலைய பணி செப்டம்பர் மாதம் முடிவடையும்.தொண்டமாநத்தத்தில் புதியதாக ஒரு துணைமின் நிலையம் ரூ.11.75 கோடி செலவில் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இத்துணைமின் நிலையம் இம்மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகத்திற்காக ரூ.5 கோடி செலவில் 22 கிலோ வோல்ட் மின்னுாட்டிகள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.பாகூர் தீயணைப்பு நிலையத்திற்கு இந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும். தீயணைப்பு துறையில் நிலுவையிலுள்ள உபகரணங்கள் வாங்கவும், அத்தியாவசிய உபகரணங்கள் வாங்கவும், தற்போது உள்ள வாகனங்களை சரி செய்யவும் கூடுதல் நிதியாக ரூ.2 கோடி இந்த ஆண்டு வழங்கப்படும்.கடந்த 2015-16 கல்வியாண்டில் சுமார் 3427 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லுாரிகளில் இருந்தன. 2016-17 மற்றும் 2017-18 ம் ஆண்டுகளில் கூடுதலாக 1507 இடங்கள் உயர்த்தப்பட்டன. 2018-19ல் மேலும் 240 இடங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்தம் 5174 இடங்கள் உள்ளன.
அனைத்து கல்லுாரிகளிலும் வை-பை மற்றும் காணொலிக் காட்சிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.வரும் 2018-19 கல்வியாண்டில் காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையம் தொடங்கப்படும். காரைக்கால் பஜான்கோ கல்லுாரியிடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில், காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த நிதியாண்டிற்குள் அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
துாய்மை இந்தியா திட்டத்தை பாகூர் பகுதியில் செயல்படுத்த 109.99 கோடியும், திருநள்ளார் பகுதியில் செயல்படுத்த 116.38 கோடி வரைவு திட்டத்திற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.