நிதி மசோதாவுக்கு அனுமதி கிடைக்காததால் அரசுக்கு நெருக்கடி!. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதிலும் சிக்கல்புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதி ஒதுக்குவது தொடர்பான அரசு சட்ட முன்வரைவுக்கு, கவர்னர் ஒப்புதல்
கிடைக்காததால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில், 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, கவர்னர் கிரண்பேடி தலைமையில் மாநில திட்டக்குழு கூடி, ரூ.7,530 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது


மத்திய அரசின் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், பட்ஜெட் கூட்டத் தொடரை ஜூன் 4ம் தேதி அரசு கூட்டியது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால், இரண்டு நாளில் கூட்டத்தை முடித்துக்கொண்டு, சபை ஒத்தி வைக்கப்பட்டது.முதல்வர் நாராயணசாமி டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் செயலர்களை சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.கடந்த 2ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. முதல்வர் நாராயணசாமி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர், சட்டசபை அலுவல் கூட்டம் கூட்டி, 27ம் தேதி வரை, கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் மீதான பொது விவாதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்தது.இந்நிலையில், நியமன எம்.எல்..,க்கள் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 13ம் தேதி வந்தது, அப்போது, மத்திய அரசின் எம்.எல்.., க்கள் நியமனம் செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை. அதையடுத்து, கடந்த 16ம் தேதி நியமன எம்.எல்..,க்கள் சட்டசபைக்குள் நுழைய முயன்றனர்.

இதற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி அளிக்கவில்லை. அடுத்து, நேற்று (19ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருவதாக இருந்தது. தீர்ப்பு எப்படி வேண்டுமாலும் இருக்கலாம் என, உஷாரான அரசு, சட்டசபையை 19ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள முடிவு செய்தது. அதற்கேற்ப, புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகாரம் தொடர்பாக சட்டசபையில் பிரச்னை எழ, அனைத்து எம்.எல்..,க்களும் வரும் 23ம் தேதி டில்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்திக்க முடிவு எடுத்தனர்.
இதற்காக சட்டசபையை 19ம் தேதியுடன் முடித்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.அரசு முடிவு செய்தபடி, நேற்றுடன் அவசர அவசரமாக அனைத்து அலுவல்களையும் முடிக்கப்பட்டு, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அதற்காக, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் இரவு வரையில், கூட்டம் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று, கோர்ட் அறிவிப்பு வரும் முன்பே, 11:30 மணியுடன் கூட்டத்தை முடித்துக்கொண்டு சட்டசபையை அனைவரும் காலி செய்தனர்.நிதி மசோதாவுக்கு சிக்கல் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு நாளான நேற்று, அரசு தீர்மானங்களுக்குப் பிறகு, துறை ரீதியாக நிதி ஒதுக்குவதற்கான, நிதி மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. ”பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் தராத நிலையில், சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறதுஎன கூறி, சபாநாயகர் வைத்திலிங்கம் சபையை ஒத்தி வைத்தார்.இது தொடர்பாக சபாநாயகர் கூறுகையில், ”2018ம் நிதியாண்டுக்கு துறை ரீதியாக நிதி ஒதுக்குவது தொடர்பான அரசு சட்ட முன்வரைவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.
இதனால், சட்டசபையில் அந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படவில்லை. ஒப்புதல் வந்த பிறகு மீண்டும் சட்டசபையை கூட்டி நிதி ஒதுக்குவது தொடர்பான சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். பட்ஜெட் நிறைவேறாததால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளதுஎன, தெரிவித்தார்.இதனால் வரும் 31ம் தேதிக்குள் சட்டசபையை மீண்டும் கூட்டி பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.