தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய
வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 விழுக்காட்டினர்  மட்டுமே நிரந்தர பணியாளர்கள். மீதமுள்ள 75 சதவீதம் ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்படும் இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்து விட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

       இதன் மூலம் அவர்களில் ஒருவர் கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது.

நிரந்தர உதவிப் பேராசிரியர்களை விட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அதிக நேரம் பணியாற்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பை பல்கலைக்கழக நிர்வாகங்கள் வழங்க மறுப்பது  மிகப்பெரிய சமூக அநீதி. தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒருவிதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதும், ஒரே பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வெறு அணுகுமுறை பின்பற்றப்படுவதும் நியாயப்படுத்த முடியாதவை. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிலைப்பு செய்ய வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி  செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூக நீதி வழங்க வேண்டும்.