கருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல்? - மிஸ் யூ கலைஞரே! #MissUKarunanidhi


 நித்திஷ்
`நரகாசூரன் இஸ் சேஃப்' என ஸ்டேட்டஸ் தட்டும் நவயுக இளைஞனும் தலையில் கட்சித் துண்டை கட்டியபடி அப்பாவின் தோளில் ஏறி அமர்ந்து, 'தாத்தா' என முழக்கமிடும் சிறுவனும் கூட்டத்திலிருப்பதுதான் 'கலைஞர்'
ஸ்பெஷல். இத்தனை இளைஞர்களை எல்லாம் எப்படி அந்த கறுப்புக் கண்ணாடிக்காரர் ஈர்க்கிறார்?'
கலைஞர்

கருணாநிதி மேல் ஏன் இத்தனை காதல்? - மிஸ் யூ கலைஞரே! #MissUKarunanidhi

காவிரி பாயும் பூமியில் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்னால் உதித்த சூரியன் இன்று காவேரியில் அஸ்தமனமாகியிருக்கிறது. அவர், கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், இயற்கையை மறுத்தவரில்லை. அதனால், இப்போது அதன்மடி புகுந்திருக்கிறார். 'அவருக்கு சுவாசக் கோளாறில்லை' என மருத்துவமனை நிர்வாகம் முதலில் தெரிவித்த தகவலில் ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. 'எழுந்து வா தலைவா' என வளாகத்துக்கு வெளியே கமறும் குரலில் கண்ணீர் முழக்கமிடும் ஆயிரக்கணக்கான தொண்டர்களிடமிருந்தது அவருக்கான ஆக்ஸிஜன். திராவிட இயக்கக் கொள்கைகளை தெருமுனையில் நின்று வாசித்துக்காட்டும் வாசிப்பு இயக்கத்தைச் சேர்ந்த முதியவரோ, சைக்கிளில் ஸ்பீக்கர் கட்டி ஊர் ஊராகக் கொள்கைகளைக் கொண்டுசேர்த்த பெரியவரோ அந்தக் கூட்டத்தில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், அங்கிருக்கும் தெரிந்தவர்களிடம் கேட்டு, 'நரகாசூரன் இஸ் சேஃப்' என ஸ்டேட்டஸ் தட்டும் நவயுக இளைஞனும் தலையில் கட்சித் துண்டை கட்டியபடி அப்பாவின் தோளில் ஏறி அமர்ந்து, 'தாத்தா' என முழக்கமிடும் சிறுவனும் கூட்டத்திலிருப்பதுதான் 'கலைஞர்' ஸ்பெஷல். இத்தனை இளைஞர்களை எல்லாம் எப்படி அந்த கறுப்புக் கண்ணாடிக்காரர் ஈர்க்கிறார்? இவர்கள் கற்றுக்கொள்ள அந்த மானமிகு சுயமரியாதைக்காரரிடம் என்ன இருக்கிறது?

நிறையவே இருக்கின்றன!

கலைஞர்

தொலைநோக்கும் கண்கள்!
 
பசித்த புலிக்கு போரிடும் வேட்கை அதிகம். கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றபோது அதீத பசியில் இருந்தார். அந்தப் பசிதான், அவரை எப்போதும் தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கவைத்தது. இன்று, மாநில அரசுகள் செல்லாக்காசாக்கப்படும் கொடுமையை முன்னரே அனுமானித்ததால்தான், 1969-லேயே மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்களை ஆராயும் ராஜமன்னார் குழுவை அமைத்தார். `மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கோஷத்தை எழுப்பினார். அந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பின்னர் ஆந்திரா, அஸ்ஸாம் மாநில அரசுகளும் வழிமொழிந்தன. இன்று அந்தப் பரிந்துரைகளின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
   

லோக்பால் குறித்து இன்று விவாதங்கள் நடக்கும் நிலையில், 1973-லேயே குற்ற ஒழுங்கீனங்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. 2005-ல் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு முன்னோடி, 1997-ல் கருணாநிதி கொண்டுவந்த தகவல் அறியும் சட்டம்தான். கட்டாயக் கல்வித் திட்டத்தையும் எல்லாரையும் முந்திக்கொண்டு உருவாக்கியவர் கருணாநிதிதான். இந்தச் சட்டங்களின் முக்கியத்துவத்தைப் பொதுச் சமூகம் அறிந்துகொள்ளும் முன்னரே அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியவர் அவர். இன்றைய இளைய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியப் பாடம் இது!

அங்கத நாயகன்!

ஒரு சின்னக் குழுவை வழிநடத்தும் டீம் லீடருக்கே அவ்வளவு மன அழுத்தம் இருக்கிறது. தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் தலைவருக்கு எவ்வளவு மன அழுத்தமிருக்கும்? ஆனால், தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சிரிப்பில் மூழ்கடிக்கச் செய்வதில் கலைஞருக்கு நிகர் அவர்தான். நாடே பதற்றத்திலிருந்த எமர்ஜென்சி காலகட்டத்தில், வீட்டுக்கு வரும் கருணாநிதியிடம் துண்டுத்தாளை நீட்டுகிறார் அவரின் மருமகன் அமிர்தம். ஆட்சியைக் கலைத்துவிட்டதற்கான குறிப்பு அது. 'அப்பாடா சஸ்பென்ஸ் முடிஞ்சதுய்யா!' என சிரித்தபடி மாடிப்படியேறுகிறார் கலைஞர். அதே காலகட்டத்தில் கலைஞர் எழுதும் எல்லாமுமே தணிக்கைக்கு உள்ளாக, 'விளக்கெண்ணெய் உடலுக்கு நல்லது, சூட்டைத் தணிக்கும்' என சமையல் குறிப்புகள் எழுதி வெறுப்பேற்றுவார்.


சட்டமன்றத்திலும் அவரின் காமெடி கவுன்ட்டர்கள் புகழ்பெற்றவை. ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் அனந்தநாயகியுடனான சட்டமன்ற உரையாடலில், 'நாங்கள் ஒரே ஒருநாள் மறியலில் ஈடுபட்டதற்கே முந்தைய காங்கிரஸ் அரசு மூன்று மாதம் சிறையில் அடைத்துவிட்டது' என்கிறார். உடனே அனந்தநாயகி, 'அப்படி சிறைக்குச் சென்றதால்தான் இன்று நீங்கள் வளர்ந்து இங்கே வந்து அமர்ந்திருக்கிறீர்கள்' என்கிறார். உடனே கருணாநிதி, 'அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்க்கட்சிகளை ஒரேநாளில் விடுதலை செய்துவிடுகிறோம்' என கவுன்ட்டர் கொடுக்க, மொத்த அரங்கமும் அதிர்கிறது. சுயபகடி செய்துகொள்வதிலும் கருணாநிதி வித்தைக்காரர். தன் புகழ்பெற்ற 'ஓடினாள் ஓடினாள்' வசனத்தையே பூம்புகார் படத்தில் நாகேஷை பேச வைத்திருப்பார். நடிகர் நெப்போலியனுடன் வாக்கிங் சென்றபோது கருணாநிதிக்கு நடை தடுமாற, 'என்னய்யா தள்ளாத வயதுனு சொல்றாங்க, ஆனா தள்ளுதே!' என சிரித்துக்கொண்டார். நள்ளிரவுக் கைது குறித்துப் பேசும்போது, 'என்னைக் கைதுசெய்த காவலரின் பெயர் முருகேசன். அதனால்தான் கையைப் பிடித்து முறுக்கிவிட்டார்போல!' என்றார். தன் வாழ்க்கையை சிரிக்கச் சிரிக்க அனுபவித்த மனிதரை மரணத்தால் மட்டுமே வெல்ல முடிந்தது!

நீளும் நட்புக் கரம்!

கழகத்துக்கும் கொள்கைக்கும் கொடுக்கும் அதேயளவு மரியாதையை நட்புக்கும் கொட்டிக்கொடுப்பார் கருணாநிதி. அவருக்கும் அன்பழகனுக்குமான ஆத்மார்த்த நட்பு உலகமறிந்தது. சட்சட்டென நட்பை முறித்துக்கொள்ளும் காலத்தில், 75 ஆண்டுக்காலம் ஃப்ரெண்ட்ஷிப்பை பேணிக்காப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு? ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுள் இருவராக இருந்தவர்கள், நாவலரின் பிரிவுக்குப் பின் 'ஈருடல் ஓருயிர்' நிலைக்கு வளர்கிறார்கள். அதனால்தான், இந்த வயதிலும் கருணாநிதியைப் பார்க்க துடிதுடித்தபடி ஓடிவருகிறார் அன்பழகன். அவரின் உடல்மொழியில்... முகத்தில் தெரியும் அந்தப் பதைபதைப்பைப் பார்க்கச் சகிக்காமலாவது கருணாநிதி மீண்டு வந்திருக்கலாம். யார் கண்டது? 'நீ பட்ட இன்னல்கள் போதும், போய் வா நண்பா' எனப் பேராசிரியரே மனதார வழியனுப்பிவைத்திருக்கக்கூடும்.

கலைஞர்

அரசியலைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் எதிரும் புதிருமானவர்கள். ஆனால், அவர்களிடையே ஒரு ஸ்பெஷல் பிணைப்பிருந்தது. கருணாநிதியைக் 'கலைஞர்' என்ற அடைமொழி இல்லாமல் .தி.மு.-காரர்கள் அழைத்தாலும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. இதை எழுதும்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் நானும் திட்டு வாங்கியிருக்கக்கூடும். கருணாநிதியைப் பாதித்த மிகச்சில மரணங்களில் எம்.ஜி.ஆரின் மரணமும் ஒன்று. இரவு முழுக்க கண்ணீர்விட்டபடி அவர் தளர்ந்துபோய் அமர்ந்திருந்ததைக் கோபாலபுரமே பார்த்தது அன்று. 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருளில் மூழ்கியுள்ளது கோபாலபுரம். அதன் தனிமையைப் போக்குவாரில்லையே!

விழிப்பாய் இருப்பாய் தமிழா!

கலைஞர்

காலத்துக்கேற்றார்ப்போல தன்னை அப்டேட் செய்துகொள்ளும் தலைவர்கள் இந்தியாவிலேயே மிகச் சிலர்தான். அவர்களில் கருணாநிதியும் ஒருவர். 'அடுத்தடுத்த தலைமுறையினர் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் அவருக்குப் பேரார்வம். அதனால்தான், அப்போது கல்லூரி மாணவனாக இருந்த என்னை அருகில் வைத்துக்கொண்டார்' என நினைவுகூர்கிறார் துரைமுருகன். இப்போதிருக்கும் தலைமுறையைச் சென்றடைய ஃபேஸ்புக்கில் நுழைந்த முதல் தலைவரும் அவர்தான். 'என்னய்யா லைக்ஸ் கம்மியாகுது?' எனத் தன் டீமை டெக்னிக்கலாக விரட்டுவதை இரண்டு ஆண்டுகள் முன்புவரை செய்துவந்தார். சாட்டிலைட் சானல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றுக்கான வெளியை உருவாக்கியது எனக் காலத்துக்கேற்ப தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் சிற்பி அவர். அதனால்தான் இறுதிவரை தேங்காமல் ஓடியது அந்த நெருப்பாறு.

இகழ்வாரையும் தாங்கும் சூரியன்!

`ச்சோ' என ஒற்றை உதட்டுச்சுழிப்பில் விளிம்புநிலை மனிதர்களை மற்றவர்களைப் போலவே அவரும் கடந்து போயிருக்கலாம்தான். ஆனால், சமூகநீதி பாடி ஆட்சி அமைத்தவராயிற்றே! சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் பணி செய்யும் சாம்பல் சூழ் மனிதர்களை சட்ட வரையறைக்குள் கொண்டுவந்தார் கருணாநிதி. ஏளனப் பார்வையில் புறங்கையால் தள்ளப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக 'திருநங்கைகள் நல வாரியம்' அமைத்ததும் அவர்தான். அரவானின் வம்சத்தவர்களைத் திருநம்பி, திருநங்கை எனத் தமிழ் வாரியணைத்துக்கொண்டது.

ஊனமுற்றவர்களுக்காகவும் சமூகநீதி பேசியது கருணாநிதியின் பேனா. 'மாற்றுத்திறனாளிகள்' என்ற அழகிய பதத்தைக் கொண்டுவந்து 'யாவரும் சமமே' என்ற கோட்பாட்டை மீண்டுமொரு முறை நிறுவினார். இன்று 'எங்களப் பெத்த ராசா' என நெஞ்சிலடித்துக்கொண்டு அழும் திருநங்கைகளும் தொலைதூரத்திலிருந்து வந்து அவரை தொட்டுவிடவாவது கூட்டத்தில் முண்டியடிக்கும் மாற்றுத்திறனாளிகளுமே இதற்குச் சாட்சி.

பற்றிக்கொள்ளும் எனர்ஜி!

கருணாநிதியைப் பற்றி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இருக்கிறது. 'கடந்த 50 ஆண்டுகளாக அவரில்லாத செய்தித்தாள்கள் இல்லை, சேனல்கள் இல்லை, சோஷியல் மீடியா இல்லை' என்பது உண்மைதான். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழர்களின் பேசுபொருளாக அவர் இருந்திருக்கிறார். அவரின் பெயரைச் சொன்னால் தொற்றிக்கொள்ளும் பரபரப்பையும் எனர்ஜியையும் எல்லாரும் ஒருதடவையாவது அனுபவித்திருப்பார்கள். அவருக்காக தமிழகம் கண்ணீர் சிந்தியிருக்கிறது, அவரைத் திட்டித் தீர்த்திருக்கிறது, இதோ, இன்று ஓரணியில் நின்று அவர் மீண்டு வர பிரார்த்திக்கிறது. இங்கு எங்கும் எதிலும் கருணாநிதியே! அணுவசைவிலும் அவரே! அவரின் எனர்ஜியே!

Never Ever Give Up!

கலைஞர்

வாழ்க்கையைக் கலைத்துப்போட்டு, திரும்ப ஜீரோவிலிருந்து தொடங்கும் தைரியம் எல்லாருக்கும் அமையாது. கருணாநிதிக்கு அமைந்திருக்கிறது. 1948-ல் நடந்த தி. மாநாட்டில் கலவரம் நடக்க, சிலர் கருணாநிதியைத் தாக்கி சாக்கடையில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். அதிலிருந்து வீறுகொண்டெழுந்து திரும்பவும் முன்வரிசைக்கு வந்தார் அவர். 1953-ல் திருப்பத்தூரில் நடந்த விபத்தில் ஒரு கண்ணில் விழித்திறன் இழந்தார். ஆனாலும், அசராமல் அடுத்த 60 ஆண்டுகள் அவரால் எழுதித்தள்ள முடிந்தது. எமர்ஜென்சி காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டபோது, 'நெருக்கடி தாளமாட்டார் இவர்' என்றுதான் டெல்லி நினைத்தது. ஆனால், பின்னர் அவர்களே வந்து கூட்டணி வைத்துக்கொள்ளும்படி வளர்ந்தார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் முதல்வரான பின் ஏறக்குறைய 13 ஆண்டுகள் ஆட்சிக்கே வரமுடியவில்லை. வேறெந்த இயக்கமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய இடைவெளியில் நீர்த்துப்போயிருக்கும். ஆனால், அதே உறுதியோடு இயக்கத்தை வழிநடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 1991-ல் கலைஞரின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பின் வந்த தேர்தலில் தி.மு. வென்றது வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே. ஆனால் அதிலிருந்தும் மீண்டு வந்தார் கருணாநிதி. 1996 - 2001 அவரின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் சகல துறைகளிலும் வெற்றிநடைபோட்டது. இதோ, முதல்வர் நாற்காலியிலிருந்து அவர் இறங்கி ஏழாண்டுகள் ஆகின்றன. ஆனால், மற்ற கட்சிகளில் நடக்கும் சலசலப்புகளில் பாதிகூட தி.மு.-வில் இல்லை. அவர் மீண்டு வந்திருந்தால் சதமடித்திருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தான் கடைக்கோடித் தொண்டன். விழ விழ வீறுகொண்டெழும் ஃபீனிக்ஸ் ஆயிற்றே அவர்! மீண்டும் வருவார்... தமிழகத்தைத் தாங்கும் தலைமகனாக... ஒரு மாபெரும் கூட்டத்தை வழிநடத்தும் சித்தாந்தமாக... காலத்துக்கும் ஓங்கி நிற்கும் வரலாறாக... அவர் மீண்டும் வருவார்!